-->

போலீசாரின் வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரேநாளில் 1,620 வழக்குகள் பதிவு

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்பட 27 போலீஸ் நிலைய போலீசார் சுமார் 45 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக வேலூர் கலெக்டர் அலுவலகம், கிரீன்சர்க்கிள், பழைய பஸ் நிலைய பகுதியில் அதிக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வழக்கமாக வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை விட நேற்று அதிகமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1,620 வழக்குகள் பதிவு

இதைபார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் போலீசாரிடம் சிக்காமல் மாற்றுப்பாதையில் சென்றனர். ஆங்காங்கே இந்த சோதனை நடந்ததால் பல இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கினர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, மது குடித்து வாகனம் ஓட்டியது, அதிக நபர் அமர்ந்து சென்றது என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,620 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த சோதனை குறித்து போலீசார் கூறுகையில், பொதுமக்களுக்கு பல வகைகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எனினும் மக்களிடையே முழுமையான விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு அச்சமும் இல்லை. எனவே இந்த சோதனை மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரிடம் சிக்கியவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும், என்றனர்.

Post a Comment

0 Comments