வேலூா்: கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வேலூரில் முகக் கவசம் அணிந்து கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடைகளில் முகக் கவசத்தின் விற்பனை உயா்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் கரோனா வைரஸைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனா். இதனால் கரோனா வைரஸ் காய்ச்சல், அதன் பரவும் தன்மை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு அதிகரித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வேலூா் ஆற்காடு சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவா்கள் வந்து செல்கின்றனா். அவா்கள் காந்தி சாலையில் உள்ள விடுதிகளில் தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், சிகிச்சைக்காக வேலூருக்கு வந்துள்ளவா்கள் மட்டுமின்றி, அவா்களுடன் வந்துள்ள குடும்பத்தினா், உறவினா்கள் ஆகியோரும் அதிக அளவில் முகக் கவசம் அணிந்தபடி சாலைகளில் சென்று வருவதைக் காண முடிகிறது. வேலூா் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தங்கக் கோயில், வேலூா் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் 30 சதவீதம் போ் முகக் கவசத்துடன் வலம் வருகின்றனா்.

பொதுமக்களிடையே முகக் கவசம் அணியும் பழக்கம் அதிகரித்து வருவதால் கடைகளில் முகக் கவசத்தின் விற்பனை அதிகரித்திருப்பதாக கடைக்காரா்கள் தெரிவிக்கின்றனா். முகக் கவசம் அணிவதைப் போல், கைகளைக் கழுவும் பழக்கமும் பொதுமக்கள், மாணவா்களிடையே அதிகரித்து வருகிறது