வேலூர்:

வேலூரில் கர்ப்பிணியை பிரசவத்திற்காக ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வேலூர் பாகாயத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணியை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் சரவணன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார்.

கர்ப்பிணி பெண்ணுடன் அவரது தாயார் பிரம்மதேசத்தை சேர்ந்த தெய்வானை என்பவரும் வந்தார்.

வேலூர் பாகாயம் சாலையில் சென்ற போது நடுவே அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவரில் ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் சரவணன் மற்றும் அதில் வந்த தெய்வானை படுகாய மடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணிக்கு காயம் ஏற்படவில்லை. பாகாயம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டிரைவர், காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரசவ வார்டில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த சம்பவத்தால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் இரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.