ராணிப்பேட்டை அருகே அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்காக நெல் கொண்டு வந்த விவசாயிகளைத் தரக்குறைவாகப் பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் பார்வையிட்டு விலை நிர்ணயம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அம்மூர் நெல் வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன் என்பவர், விவசாயிகளை நோக்கி ஈர நெல் கொண்டு வருவதாக ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராணிப்பேட்டை - சோளிங்கர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறி்ந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லச் செய்தனர்.

தொடர்ந்து விவசாயிகளைத் தரக்குறைவாகப் பேசிய நெல் வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். இதன் காரணமாக அங்குப் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.