ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், கைசாலா செயலி மூலம், புயல், மழை சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. 
புயல், மழையால் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், ஏரியை நேற்று பார்வையிட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவேரிப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு, 30.5 கன அடியில், 20.5 அடி நிரம்பியுள்ளது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும். ஏரிக்கரைகள் பலப்படுத்தப்படும். ஏரி அருகே, பூங்கா அமைக்கப்படும். 

நிவர் புயலால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை கண்டறிய, தமிழகத்திலேயே முதல் முறையாக கைசாலா செயலி மூலமாக, ஜியோ டேக்கிங் முறையில் புகைப்படங்களுடன் கூடிய, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலைத்துறையினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.